தோழா யார் இவர்கள்
இத்தனை நாள் எங்கிருந்தார்கள்..
பொள்ளாச்சியில்
பொடிப்பிஞ்சில் விடம் தின்றார்கள்
பொறம்போக்கு என வாக்காளனை எண்ணி
போயஸ்தோட்டத்தில் பிணம் தின்றார்கள்..
பொய்வழக்கில் கூட்டிப்போய்
பொது இடத்தில் கைவிட்டு
போவதை தின்றார்கள்
போலிகாவலனாய் பெருமை பெற்றார்கள்..
காசுக்கு தலையாட்டி
கண்ணுமண்ணு தெரியாமல் குடிச்சு
கூவானூரில் கூத்தடிச்சு
என் தமிழன்மானத்தை மற்ற தேசத்தில்
எச்சமென எண்ண வைத்தார்கள்..
மீசையில் மண் ஒட்டுமளவிற்கு
மேசைக்கு அடியில் போய்
அவமானப் பதவி பெற்றார்கள்..
தார்மீக போராட்டத்தில்
கோமாளிகளாய் உட்புகுந்து
சொந்த மக்களையே
சுட்டு சுவைத்தார்கள்..
கொடியநோயில் நாங்கலிருக்க
குடிக்கும் கஞ்சிக்கும் வரி கேட்டார்கள்.
கோவணத்தை பிடுங்கிக்கொண்டு
கோட்டையிலே கொடியேற்றினார்கள்..
மாததவணைக்கும்
வட்டிக்கு வட்டி போட்டு
இருதயத்தைப் பிழிந்தார்கள்..
கொடியநோய் காலத்திலும்
கொடியநோயாய்
இவர்கள் இருந்தார்கள்..
மக்கள் வயிற்றுக்கு வறுமை சொல்லி
மனங்குளிர மதுக்கடை திறந்தே
மதுவுக்கு பாதுகாப்பு போட்டு
தமிழச்சியின் மாராப்பை
அவிழ்த்தெறிந்தார்கள்..
தாடிக்கு கூசா தூக்கி
கோடிகளில் குளித்தார்கள்..
பேருந்து கட்டணமேற்றி
பேச்சுக்கு பெருமை சேர்த்தார்கள்..
வாகன எரிபொருளை
வாய்க்கு வந்த விலையில் விற்றார்கள்
என் வியர்வையை
நக்கியே நாடகமாடினார்கள்..
என் உழைப்பில்
பத்துக்கு இரண்டு பணம்
வரியாகப் பெற்றார்கள்..
வழியெங்கும் பள்ளம் தோண்டி
என் வயிற்றுக்குள்
எட்டுவழிச்சாலைக்கு நடுகல் நட்டார்கள்..
ஒருநாள் வருகைக்கு
போகும் ஊரெல்லாம் வழி மறைத்தார்கள்
அவசர ஊர்திக்கும் உயிர் தர மறுத்தார்கள்....
எதிர்த்து பேசும் எதிரிக்கும்
கணக்கு பாராமல்
கணக்கில் வரவு வைத்தார்கள்....
அடிப்பதும் அழுவதுமாய்
இருவரும் சேர்ந்தே
அழகாய் நடித்தார்கள்
நடுவரிடம் நல்சான்று பெற்றார்கள்..
இன்றோ
கண்ணீரை துடைக்க
கள்ளநோட்டு கொண்டு வந்தே
கண்ணெதிரே
பொங்கல் பரிசளித்தார்கள்..
என் பணத்தை பிடுங்கிக்கொண்டு
அதை எனக்கே பிச்சையிட்டார்கள்
பெரும்பேறு பெற்றார்கள்..
ஐந்துவருடத்தில் ஒருமுறையேனும் குறை தீர்க்க இல்லை அதை
கேட்பதற்கே வராமல்
இப்போது வாக்குகேட்டு
என் வீட்டு வாசலுக்கு வந்திருக்கும்..
இவர்கள் யார் தோழா...
இவர்களை என்ன செய்ய...

0 Comments