கண்களை மூடிக்கொள்
கயவனை நினை
களவு போன காலத்தில்
நட...அவன் நினைப்போடு நட...

நீராம்பலோ நிலவோ
நிலவின் கரையோ
மூச்சுக் காற்றிலே
மகரந்தமோ....

மனசோடு அவன் அந்தமோ
நீ ஆதியானாயோ
ஆவிக்குள் பூத்துப் போனாயோ...

அந்த நொடி
அந்த கணம்
தேகத்தில் ஒரு சிலிர்ப்பு
இதுவரை
தீண்டாத ஒரு பரபரப்பு
ஏக்கமாய்
பெருமூச்சோடு  ஒரு பார்வை...

பாதம் கடக்கையில்
வழிகள் மறந்திடும்
பார்வை விழிக்கையில்
பயணம் தொலைந்திடும்
பரவச உலகில் பறந்து போவாய்
திறவின்றியே களவு போவாய்...


கனவுக்குள் தொலைந்து போவாய் கற்பனையில் கல்லறை சமைத்து
அதில் கவலையின்றி உறங்குவாய்..
காற்றையும் கடனாய் கேட்பாய்
சுவாசிக்க மறந்தே
சுகம் பெறுவாய்
சுட்டிடும் நெருப்பு சுகமாகும்..
சூடாக உண்ணும்போது
மனம் நோகும்...


மனதிற்குள் அவன்
குடியிருப்பதாய்  சொல்வாய்
வாடகைக்கு ஏனோ
உன் வாய் பேச்சைக்
கேட்ட தாய் சொல்வாய்...


வழிநெடுகிலும்
அவன் முகமே தேடுவாய்
தேடும் தேடலின் முடிவாய்
நீ சிரிப்பாய்
வெட்கத்தில் சிவப்பாய்...

அவனின் குடியிருப்பு
உன்
இருவிழிக்கு நடுவே என்று
நீயே உன்னிடம்
பொய் சொல்லி ஏமாறுவாய்
வாய் தீண்டும்வரை வாதாடுவாய்...

பகலுக்கு வெள்ளையடித்து
இரவாக்குவாய்
இரவினில் இரண்டு சந்திரனை  இரவலாக கேட்பாய்...
இரண்டையும் இருவிழிக்கு
நடுவில் மூடியும் வைப்பாய்...

இரவில் முட்ட முட்ட கண்விழித்து உறங்கவும் செய்வாய்
உடுத்தும் உடைகளை
வெறுக்கவும் செய்வாய்
வேகமாய் வேதனையில்
சிரிக்கவும் செய்வாய்
கண்ணாடிக்கு முன் நின்று
காலத்தைக்  கழிப்பாய்...
கண்ணாடியை காதலித்து
முத்தமும் இடுவாய்...

கருங்கல் சிலைகளும்
கடவுளாய் மாறும்
கடவுள் நேரில் வந்தாலும்
கற்சிலையாய் தோன்றும்...

கண்ணெதிரே அவன் முகமே
கண் மூடியும் தோன்றும்
கண்இமைக்குள் அவனையே
சிறைபிடிக்கவும் தோன்றும்...

இது காதலோ பைத்தியமோ என
பார்வைகள் கேட்கும்
பரிசம் போட்டு படுக்கை
செல்லும் வரை
பாடாய்ப்படுத்தும்
பசலையாம்
பருவக் காதலின் கொடுமை...

படிப்பின் பெருமை அறியாது


உடுப்பை மட்டுமே பார்க்கும்
உள்ளம் தெரியாது...
உயிரை மட்டுமே கேட்கும்
உயிரோடு வாழப் பிடிக்காது...
இறுதியில் உடல்கள் மட்டுமே
மண்ணில் சேரும்
உதடுகள் பிரிக்காது..
உண்மையில்  என்றென்றும்

உயிர் காதல் மரிக்காது...