கற்பனைக்கு பஞ்சமில்லை
கண்ணுக்கு
கண்ணீர் துளிகள் மிச்சமில்லை..

அடிவயிறு துடிக்கையிலே
ஆவியா நீர் சுரக்கயிலே
இமைக்க மறந்து விட்டேன்
இமைப்பொழுதும்
உழைக்க மறக்கலையே...

நாளெல்லாம் 
வேர்வையில மரம் வளர்த்தேன்..
வெளைஞ்சதை
அறுத்துப் பார்த்தா
அடி வயிறு நிறையலயே...

பக்குவமா
நாத்து வாங்கி..
பருவம் தவறாம
நடுகையிட்டு...

மண்புழுவை
தின்னுப்புட்டு - என்
மனம் நோகாம
மகசூலா வளர்ந்திருச்சு
நாவுல இனிக்கவும் கூடிருச்சு....

மாசமும் ஆறு போயி
அறுவடையும் கூடிப்போயி
அரசாங்கம் சொன்ன கூலி - என்
கண்ணையும் தின்னுடுச்சே
மண்ணள்ளி போட்டுடுச்சே.....

கடன்காரக்கூட்டமோ
கழனியவும் கேட்குதே...
வெளைஞ்சத கொடுத்தாலோ
உடுப்பையும் கேட்குதே...

மானமுள்ள மண்ணுங்க
என் மனசையும் தின்னுடுச்சு..
இதுக்கு
மண்ணு தான் காரணமா...
மக்கா
நீங்கள் இல்லையா...

மழலைக்கு பாலோட
கலந்திடும்
என் கரும்பே...
என்ன கருவருத்து போயிடுச்சு..
விவசாயம் வெளிநாட்டுக்கு
ஓடிருச்சு...

வெந்ததை தின்னுபுட்டே
விதி வந்தா சாவோமுன்னு
நானும்
மிடுக்கா சட்டைபோட்டேன்..
இப்போ
வாசல் கதவு தொறந்தே
சலாம் போட்டேன்...

போங்கய்யா...
பொழப்பு போச்செனக்கு...
ஒருநாள் உங்கள்
உசுரபோற வலிதெரியும்...
அன்னைக்கு
என் வலிபுரியும்...