நீ யார்..
ஏன் எனக்காய் அழுகிறாய்...
ஆசையில் நூலொன்று கட்டினேன்
ஆசைக்கு கட்டிலில் கிடத்தினேன்.
ஆபாசவார்த்தைகளால் அனுதினமும் அர்ச்சித்தேன்.
ஆனாலும் நீ எனக்கு அன்னைமடி - என்
அன்புக்கு எல்லையடி..
அருகில் ஒருநாள்
அந்நியமாய் பலநாள்
தட்டிக் கழித்த உன் அழைப்புகள்
தவிக்கவிட்டே சிரித்த
தருணங்கள்..
தண்ணீர் குவளையாய் - உன் கன்னங்கள்
காண்பதற்கு காரணம் சொல்லியே
கழிந்த என் நேரங்கள்....
கருணைகள் இல்லையடி எனக்கு
காதலைத் தேட உன்னைத்தவிர வேறு
கைகளும் இல்லையடி எனக்கு
இது தான் என் காதலோ
அதுவும் புரியவில்லை எனக்கு.....
நான் உனக்கு என்ன செய்தேன்..
நாளைக்காய் என்ன செய்தேன்...
நாவால் இனிக்கவுமில்லை
நாணம் கண்டு இரசிக்கவுமில்லை
நடமிடும் பாதம் தீண்டி நடிக்கவுமில்லை
நாத்திகனாயிருந்தேன் - ஏனோ
உன்னை கருவரைக்காகவே
கட்டிலறையில் தேடினேன்....
வயிற்றை கிழித்தேன்
வாரிசைப் பெற்றேன்..
வயோதிகம் வர வர
வார்த்தையில் சுட்டேன்..
இடுப்பு மடிப்புகளை காட்டி
இவள் இன்பமற்றவள் என்றேன்..
இனிப்பற்ற மலரென்றேன்..
ஏனோ மறந்தேன் - நீ
எனக்காய் காத்திருந்தே உண்பதையும்
என் மகன் குழப்பிய மிச்சத்தால்
வயிற்றை நிரப்பியதையும்
வயிற்றை கிழித்த வலியோடு வருத்தமின்றி வாழ்வதையும்...
எனக்கோ அழத் தோன்றவில்லை
நீ ஆறுதல் கூறவும் எதிர்பார்க்கவில்லை..
ஆனாலும்
ஆசையடி எனக்கு
அடுத்த பிறப்பிலும் - என்
ஆவியாய் நீ இருக்க..
நான் உன் முதல் பிள்ளையாய் பிறக்க......

0 Comments