பிரச்சாரம் இங்கே விபச்சாரமாய்
நான் காசு தருகிறேன் காதலி என்றே
கதறும் கரை வேட்டிகள் கண்டீரோ..


நான் என்ன செய்தேன்
என சொல்லாமல்
எதிரிருவர் ஊழல் சொல்லும்
உண்மையை காணீரோ...

கழனியெல்லாம் கட்டிடங்களாக்கி
குளங்களெல்லாம் குளிர்மாளிகைகட்டி
கூவானூரில் கூத்தடித்த கொடுமையை மறந்தீரோ...


இலவசமாய் வீடு தந்தேன்
வீட்டிற்கு வாடகையை
மின் கட்டணமாய் வசூல் செய்தேன் காணீரோ...


இலவசமாய் தொலைக்காட்சி தந்தேன்
இலவச மருத்துவம் தொலைதூர காட்சியானதை காணீரோ..


இலவசமாய் வாகனம் தந்தேன்
அதன் கட்டணத்தை எரிபொருளாக மாற்றி கடனும் தந்தேன் காணீரோ..

எட்டுவழிச்சாலை தந்தேன்
ஆங்காங்கே சுரண்டும்
சுங்ககட்டணம் காணீரோ..


இலவச தொகுப்புகளுக்கு கை நீண்டீரோ
இலவச குடிநீர் காணீரோ...

இலவசம் என்று இங்கே ஏதுமில்லை
இது இரத்தம் உறிஞ்சும் தந்திரம்
என அறிவீரோ..
அறிந்தே பிழை செய்யும் அறிவீனரே...

அறிவிப்பும் வரும் ஒருநாள்
அரசியல்வாதி வாங்கிய கடனுக்காய்
உன் மானம் அடகுவைக்கப்பட்ட சேதி....