நீண்டகால இடைவெளிக்கு பின் தன் பேரனை கண்ட பாட்டியின் உணர்வுகளை வெளிப்படுத்த எடுத்த முயற்சி....இது..
.. ..அடியாத்தி..என் பேராண்டி
என் பேரண்டி...
என் ராசா வந்திருச்சு
என்ன பாக்க வந்திருச்சு
நாலெட்டு நடந்து வந்தா
உன் பாதம் நோகுமுன்னு
உன் தாத்தா தோளை கடிச்சு
வளர்ந்த புள்ளை...
நாலேறு சக்தியோடு
சம்சாரியான வனப்போடு
சட்டியில கறிச்சோறோடு
இந்த கருவாச்சி கெளவிய
கைபிடிக்க வந்திருச்சு.....
அம்மாடி..என் ஆத்தா..
என்னப்பெத்த..மாரியாத்தா..
காலங்காத்தாலே நான் கண்ட
கனவு இப்போ பலிச்சிருச்சு
மூணு நாளுக்கு முன்னாடி
மோட்டுக்கூரை மேல ஏறி
மோடம் போட்டு கத்துச்சே
அந்த காக்கா சத்தம் புரிஞ்சிருச்சு
உன்ன கண்டதும் அது
உண்மையாயிருச்சு..
நெனப்பெல்லாம் நீ தான்யா
என்னெப்பெத்த மகராசா
உன் அப்பன காணலியே
காட்டுப்பய கடனடைக்க
கடல் தாண்டி போனானோ..
இங்கே காடு கழனியெல்லாம்
கன்னியாட்டம் காத்திருக்கு
கனவு கோட்டை தொறக்க
கடன் காரனா போனானோ..
என்னானு நான் சொல்ல
நாம்புடிச்ச மருமகப்புள்ள
மானமுள்ள மதுரக்காரி..
மசக்கையா இருக்கையிலே
கேட்டாளாம் பங்களா வீடு.......
அவாசை நிறைவேத்த
என் புள்ள கடல் கடந்தான்
கைப்புள்ள உன்னவிட்டு
கடமைக்காக காத்திருக்கான்..
என் கண்ணு மூடயில
முந்தானையில மூக்குசீந்தி
உன்னம்மா பொன்னம்மா வருவாளோ
எனக்கு குடம் உடைக்க உருத்தாளோ..
உரிமை நானும் கேட்கலையே
என் உசுரான என்ன பெத்தாரே..
நான் உசுரோட ஒருதடவை
உன் அப்பனை என் மடிமேல போட்டு
மனம் குளிரு மட்டும்
தலைய நீவி தாலாட்டு பாடனும்யா.
தாயாக நானும் என் மகனுக்கு
ஒருவாய் சோறூட்ட வேணுமய்யா..
கண்ணா..என் கன்னுக்குட்டியே
நீ எனக்காக செய்வியா
உன் அப்பன்கிட்ட
ஒரு தடவை சொல்லேன்யா....
...என முடித்தது என் அப்பத்தாள்...

0 Comments