என் வலி தெரியுமா
உனக்கு ...
ஆற்றல் புரியுமா உனக்கு
என் விசுவாசம் தெரியுமா உனக்கு..

நானும் விடியும் முன்னே
உனக்காக எழுகிறேன் - பலநாள்
பசிக்கும் வயிற்றை ஆறப்போட்டு பட்டினியோடு உழைக்கிறேன்...

சிந்தையில் நித்தமும்
சிதறிய கவனத்தை
சிரம் தாழ்த்தியே பணிசெய்கிறேன்...

ஆயுளைப் பாதியாய் குறைக்கும் காற்றையும் அலுவலக பேச்சினூடே சுவாசிக்கிறேன்..
உடலையும் கெடுக்கிறேன்
உயிரையும் கெடுக்கிறேன்
நித்தமும் உயிராக
உனக்காக உழைக்கிறேன் ....

என் வியர்வை தெரியுமா
உனக்கு...
வியர்வையின் வாசனை
தெரியுமா உனக்கு ....
என் முகம் அது
தெரியுமா உனக்கு .....

ஒவ்வொரு நொடியிலும்
ஒவ்வொரு வேலையிலும்
உன் காசை காப்பாற்றவே
கடினமாக உழைக்கிறேன்.....

உனக்கு ஏனோ
எங்கள் மேல் கரிசனம் இல்லையோ லாபத்தை மட்டுமே பார்க்கும் நீயோ இலட்சியத்திற்காக உழைக்கும் எங்களை பார்ப்பதில்லை ஏனோ...

விடியலை கணக்குப் பார்க்கும் உனக்கு
ஏனோ விடிய வைத்தவன்
முகம் தெரியவில்லை ....
உன் போல் தானே
எனக்கும் பசிக்கும்....

நேற்று சம்பாதித்தாய்
இலாபம் கொள்ளை பெற்றாய்
இரும்பு பெட்டிக்குள் பூட்டினாய்.....
என் வியர்வையில் விளைந்ததே அது...

இன்று  கஷ்டம் எனக்கு
கொடுக்க மனமில்லை உனக்கு -
என் விசுவாசமே நஷ்ட கணக்கு...

லாபத்திற்கு மேல் லாபம் -  நீ சம்பாதித்தது
யாருடைய உழைப்பு - அந்த
லாபத்தில் நிறைந்திருக்கும்  - என்
விசுவாசத்தின் பொறுப்பு ....

கூட்டி கழித்துப் பார்
விசுவாசத்திற்கு சம்பளம்தான்
கூலி என்பாய்  - நான்
சம்பளத்திற்கு மட்டுமே
வேலை செய்திருந்தால் என்றோ - நீ சாக்கடைக்குள் போயிருப்பாய்...

முதலாளியே
முடிவு உன் கையில்
தொழிலாளி இல்லையெனில்
உன் ஒருகாசு பத்தாகாது - நீ இலாபத்தை கையிலேந்தியே
நடமாட முடியாது....

உங்களுக்கு கொடுக்க மனமில்லை
எங்களுக்கு எடுக்க மனமில்லை  - பொறுக்கும் வரை 
உங்களுக்கு தொல்லையில்லை...

போதுமடா...
மானிட பிறவியே...
உழைப்பு என் கையில்
இருக்கும் காலம் வரை - என்
உழைப்பே என்னை உயர்த்தும்  - உன் உண்டியல் எனக்கு தேவையில்லை..

உதிரம் சிந்தும் உழைப்பாளி
உனக்கு எங்கே மனுநீதி....
அடிமைபோலே உழைக்கிறோம்
ஆள்பவனோ கொழுக்கிறான் - நீ
உண்மை என்றறிவாயே..
உழைப்பின் மதிப்பை யாரறிவாரோ...