குருவிக்கு ஆசை
கூடுகட்டி முட்டையிட..
சின்னச்சின்ன சுள்ளி பொறுக்கி
சீக்கிரமே கூடுகட்டி
குட்டிக்குட்டி குஞ்சுகளோடு
கூடி வாழ ஆசையம்மா..
குருதாளி செடிக்குள்ளே
சேர்ந்து சிரிச்ச நெனப்போடு
சேலை தலைப்பை மூடி
சென்னைப்பட்டினம் வந்ததம்மா..
வீதியெங்கும் தெருவிளக்காம்
வானம் தொடும் மதில்சுவராம்
மனசு மட்டும் இல்லையாம்
மடி நிறைத்தவன் முகவரி காண..
மனசுபூராம் மத்தாப்பாம்
மணவாளன் தந்த முகவரி தப்பாம்
மருகுது குருவியொன்னு
மரீனா கரையினிலே..
மத்தியான மகிழம்பூ
மறந்துருச்சாம் வாசனையை
மறந்து போன மறுவண்டிக்கும்
மானாமதுரைக்கும் மட்டுமே
காசிருக்கு..
கமுதிக்கல்லோ போகவேணும்
காசில்லாம கலங்குதம்மா..
வயிற்றுக்குள் பிஞ்சு
நஞ்சாக கத்துதம்மா..
நாக்கு தண்ணி கேட்டு
நடுத்தெருவில் சுத்துதம்மா..
சுத்துமுத்தும் தேடிப்பாக்க
தேடும் கடையல்லோ பூட்டிருக்கு
தென்னைஓல கீத்தோட
ஒரு மீனுகடை தூரமா திறந்திருக்கு..
தைரியத்தை கக்கத்துல வைச்சு
கண்ணுரெண்டையும் காலுல தைச்சு
கத்துது கொலுசு சத்தம்
மணலோட மனசு போல..
வலியோட நடந்தவளோ
நாழு எட்டு தொட்டிருப்பா
தோத்துப்போனால் போட்டியில..
தொரத்தும் வெய்யிலோ கொத்திருச்சு..
ரெக்கை ரெண்டும் சூட்டிலயும்
சுண்டி இழுக்கும் பசி வயித்துலயும்
இறகெல்லாம் படபடக்க
இமைமூடிக்கிச்சு
மணலுக்குள்ள மயக்கத்தோட..
மனசு அடிச்சுக்கிச்சு
மைபோட்ட கண்ணு திறந்திருச்சு
மசக்கையான வயிறு இப்போ
மடிக்கு வெளியே தெரிஞ்சிருச்சு..
காத்திருந்த நேரம் குறைஞ்சு
கண்ணுமுழி விரிஞ்சிருச்சு
நான் மயானத்துல இப்போ இல்ல
யாரோட மடியிலயோ படுத்திருக்கேன்..
மைனா மைனா இன்னு
மாமன் கத்தும் சத்தம் கேட்டுருச்சு..
மனசு மடைதிறந்து
வாயடைச்சு ஓடிருச்சு - என்
மாமனோட கை இப்போ
என் கன்னத்தோட கலந்திருச்சு..
ஏய்..புள்ள..மைனா
எழுந்திரி புள்ளயின்னு...
நீ எப்புடி இங்க வந்தே...
என் மாமானோட குரல் கேட்க
என் மடிக்குள்ள மழலை சிரிச்சிருச்சு..
அடியாத்தி..என் உசுரே
உன்ன காணாம செத்தேனய்யா..
மாசம் மூணு ஆயிருச்சு
கொரோனாவுல என் உசுரு
உன்ன காணாம வெந்து தின்னுருச்சு..
உசுர கையில புடிச்சல்லோ
உன்னக்காண ஓடியாந்தேன்...
மாமனோடு மைனாக்குஞ்சு
மனசோடு நிறைஞ்சிருச்சு..
மாங்கல்ய மஞ்சளும் இப்போ
மனசோடு மலர்ந்திருச்சு..
மாராப்புக்குள்ள கூடு கட்டி
மழலை ஒண்ணு பொறந்திருச்சு..

0 Comments